அஷ்டவசுக்கள் (எட்டு வசுக்கள்):
பிரஜாபதியின் பிள்ளைகள்:
தரன், துருவன், சோமன், அபன், அநிலன், அக்கினி, பிரத்தியூஷன், பிரபாசன் என எட்டுப்பேர்கள். இந்த எட்டுப்பேருக்கும் அஷ்டவசுக்கள் என்று பொதுப்பெயர்.
வசிஷ்டர் ஒரு முனிவர். காட்டில் தவம் செய்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் ஒரு பசுவை வளர்க்கிறார். அது தெய்வப்பசு. பார்க்க மிக அழகாக இருக்கும். அந்தப் பசுவுக்குப் பெயர் "ஓமப்பசு".
அந்த எட்டு தேவதைகளான "அஷ்டவசுக்களும்" மேல் உலகத்திலிருந்து பூமிக்கு வருகின்றன. இங்கு வந்து இந்த ஓமப் பசுவை பார்த்து அதிசயித்து அதன் மேல் ஆசை வைக்கின்றன. அதில், அந்த எட்டு வசுக்களில் ஒரு வசு மட்டும், சிறு குழந்தையைப்போல, எனக்கு அந்த பசு வேண்டும் என்று கேட்கிறது. அது இல்லாமல் மேல் உலகம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. எனவே அவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த பசுவைப் பிடித்துக் கொண்டு மேல் உலகம் சென்றுவிடுகின்றனர்.
முனிவர் வருகிறார். பார்க்க்கிறார். பசுவைக் காணோம். ஞானதிருஷ்டியில் பார்க்கிறார். பசு மேல் உலகத்தில் இருக்கிறது. திருடிக் கொண்டு சென்றுள்ளார்கள். கோபம் முனிவருக்கு. என் பசுமீது ஆசைப்பட்ட அந்த எட்டு வசுக்களும் இந்த மண் உலகில் பிறந்து கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று சாபம். அந்த எட்டு வசுக்களுக்கும் இந்த சாபம் தெரிந்துவிட்டது. வந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்கின்றன. தண்டனை குறைக்கப் படுகிறது. எட்டு வசுக்களில் 7 வசுக்கள் இந்த பூமியில் பிறந்தவுடன் இறந்து மேல் உலகம் செல்லலாம். ஆனால், என் பசுமீது ஆசை கொண்ட அந்த எட்டாவது வசுமட்டும் இந்த மண் உலகில் பிறந்து மற்ற ஏழு வசுக்களின் காலத்தையும் கஷ்டத்தையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்று தண்டனையை மாற்றி தீர்ப்பை எழுதிவிட்டார்.
கங்கை என்பவள் பெண். அவள் பாரத தேசத்தின் ராஜாவான சந்தனு மன்னனுக்கு மனைவியாகி இந்த எட்டு வசுக்களையும் பிள்ளைகளாக பெறுகிறாள். ஆனால், தன் கணவன் சந்தனு மன்னனிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அதன்படி அவளுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் என்ன செய்யப் போகிறாள் என்று கணவன் (மன்னர்) கேட்க கூடாதாம். அதன்படி, அவள், ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கங்கை ஆற்றில் தூக்கி எறிகிறாள். கணவனுக்கு கோபம் வந்து, எட்டாவது குழந்தை பிறக்கும்போது தடுக்கிறான். அவள் அந்த குழந்தையுடன் ஆற்றில் மறைகிறாள். அந்த குழந்தையை மட்டும் ஆற்றில் எறியாமால் வளர்த்து பெரியவன் ஆனதும் கணவனிடம் ஒப்படைக்கிறாள். அந்த மகன் பெயர் தான், மகாபாரதக் கதையில் மிக முக்கியமானவரான பீஷ்மர். அந்த சாபத்தால் தான் அவர் அவ்வாறு இந்த பூமியில் பிறக்க வேண்டியதாய் ஆனதாம்.
எல்லோருக்கும் அவரவர் முற்பிறவிச் செயல்படி, அடுத்த பிறவி அமையும்போல!.
No comments:
Post a Comment