Monday, July 27, 2015

அர்த்தநாரிஸ்வர்

அர்த்தநாரிஸ்வர்:
எல்லா கருவும் உருவாகும் வேளையில் அது பெண்ணாகவே இருக்குமாம். அதன்பின்னர்தான், அது ஆண், பெண் என்ற வேற்றுமையை எடுக்குமாம். அதன் குரோமசோம்கள் எது ஆதிக்கம் கொண்டதாக இருக்கிறதோ அது ஆண், பெண் என்ற பேதத்தை எடுக்கிறதாம். இது விஞ்ஞான பூர்வ உண்மையாம். 

ஆக எல்லோமே பெண்தான். பெண்ணுக்குள்தான் ஆணாம். இதை சிவன், ஆண் பாதி, பெண் பாதி என்ற தத்துவத்தை விளக்க, அர்த்தநாரீஸ்வர் என்ற பாதி பாதி நிலையில் இருந்திருக்கிறார். சிவன் வலப்பக்கம் பெண்ணாக இருப்பார் என்று நினைக்கிறேன். எந்த வெளிப்பெண்ணையும் ஒர் ஆண் தன் வலப்பக்கத்தில் நிற்கும்படி வைத்துக் கொள்ளவேண்டுமாம். அவள் மனைவியாக இருந்தால் மட்டும் அவளை தன் இடப்பக்கத்தில் (இதயத்தின் பக்கத்தில்!) வைத்துக் கொள்ள வேண்டுமாம். திருமணத்தின்போதும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவே தெரிகிறது. 

சிவன் பார்வதி இருவரும் அர்த்தநாரீஸ்வரன், அர்த்தநாரீஸ்வரி என்று இருவரும் பாதி பாதியாக இருக்கின்றனர். இதற்கும் ஒரு கதை சொல்லித்தான் விளங்க வைத்துள்ளார்கள். பார்வதி என்னும் உமாதேவியும், அவர் கணவர் சிவபெருமானும் மேல் உலகில் இருக்கிறார்கள். அங்கு சிவனை பார்க்க பிருங்கி முனிவர் வருகிறார். அவர் முனிவராய் இருந்ததால், வீடுகளில் நடக்கும் இங்கிதம் தெரியாதவர் போலும். வீட்டின் எஜமானியை ச்ந்தித்து பாராட்டிப் பேசிவிட்டுத்தான் அந்த வீட்டு எஜமானியின் கணவரை சந்திக்க வேண்டும். இது எங்கும் இருக்கும் நடைமுறை. பிருங்கி முனிவருக்கு இது தெரியவில்லைபோலும். உமாதேவியைப் பார்த்துக் கொண்டே, வணங்காமல், பேசாமல், தன்பாட்டுக்கு சிவன் இருக்கும் இடத்தை நோக்கிப் போகிறார். எந்தப் பெண்ணாலும் இதை சகித்துக் கொள்ள முடியாது. மரியாதை கொடுத்தாத எவரையும் உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள். உமாதேவியாருக்கு பயங்கர கோபம். பிருங்கி முனிவரின் வலிமை எல்லாம் போகக்கடவது என்று சாபம். பிருங்கி முனிவர் தன் வலிமை போய், கால்தடுமாறி கீழே விழுந்துவிட்டார். சிவன் எப்போதும் பாவம் பார்ப்பவர். எனவே பிருங்கி முனிவரை, தன் கையில் வைத்திருக்கும் தண்டத்தை முட்டுக் கொடுக்கிறார். பிருங்கி விழவில்லை. விழாமல் தப்பித்துக் கொள்கிறார். உடனே தேவியின் கோபம் சிவன் மேல் தாவுகிறது. இயல்புதானே! அதுதானே இந்த பூவுலகின் சட்டமும்! தேவி கோபித்துக் கொண்டு கேதாரம் போகிறார். அங்கு தவம் செய்கிறார். கணவன் தனக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற தவமோ? தெரியவில்லை. ஆனாலும், சிவன் அங்கு வந்து நீ பாதி, நான் பாதி என்று சமாதானம் ஆகிறார். 

பெண்மைதான் கருவில் முதலில் உருவாகிறது;
பெண்மைதான் வாழ்வில் வழிநடத்துகிறது;
பெண்மைதான் முடிவில் வெல்கிறது;
பெண்மைக்குள் தான் ஆண்மை! 
அப்படியென்றால் சிவனுக்குள் சக்தி இருக்கமுடியாது.
சக்திக்குள் சிவன் இருப்பார். 
அணுவில் எலெக்ட்ரானின் சுற்றுக்குள் நியூட்ரான், புரோட்டன்கள் உள்ளன. வெளியில் பாதுகாத்து சுற்றிக் கொண்டிருப்பது எலெக்ட்ரான் என்னும் சக்தியே! சக்தியை சிவன் தாண்ட முடியாது. இயக்கம் சக்தி. அதனால்தான், சிவன் தன் இடப்பக்கம் சக்தியை வைத்துக் கொண்டார். மனிதனின் இடப்பக்கம்தான் இயக்கமே!
அரத்தநாரீஸ்ரரை அழகு தமிழில் "மாதொருபாகன்" என்கின்றனர். மாதை ஒரு பக்கத்தில் கொண்டவன். 

No comments:

Post a Comment