அர்ச்சுனன்:
இவன்தான் மகாபாரதத்தின் கதாநாயகன் என்று கூறுகின்றனர். மொத்த கதையும் இவனைச் சுற்றியே அமைந்திருக்கும். கடவுளான கிருஷ்ணன் இந்த அர்ச்சுனனை வைத்துத்தான் தர்மத்தை நிலைநாட்டி இருப்பான். கடவுள் தர்மத்தை அவரே நேரில் நிலைநாட்டுவதில்லை போல! மனிதன் மூலமே இதை செய்கிறான் போலும்!
கிரேக்க இதிகாசத்தில் இந்தமாதிரி கதாநாயகன்கள் மனிதப்பிறவியாக இருக்க முடியாது. தெய்வப்பிறவியாகவே இருப்பர். அப்படியென்றால் இங்கு அர்ச்சுனன் எப்படி மனிதப்பிறவியாக இருப்பான். ஆம் ஒரளவு உண்மைதான். இவன், பாண்டு மன்னருக்கும், குந்திதேவிக்கும் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அப்படிப் பிறக்கவில்லை. ஏதோ ஒரு சாபத்தால், பாண்டு மன்னர் தன் மனைவியுடன் கூடிஉறவு கொள்ள முடியாதநிலை. அப்படி மீறி உறவு கொண்டால் இறக்கும் நிலை. எனவே, குந்திதேவி, தனக்கு, ஏற்கனவே முனிவர் சொல்லிக் கொடுத்திருந்த மந்திரங்களைக் கொண்டு, ஒவ்வொரு தேவர்களையும் அழைத்து தனக்கு குழந்தையை அளிக்கும்படி கேட்கிறார். கணவர் பாண்டுவின் அனுமதியின்பேரில்தான். அப்படித்தான் சூரியனுக்கு கர்ணனையும், எமதர்மனுக்கு யுதிர்ஷ்டன் என்னும் தர்மனையும், வாயுதேவனுக்கு பீமனையும், இந்திரனுக்கு அர்ச்சுனனையும் பெற்றெடுக்கிறாள். பாண்டுவின் மற்றொரு மனைவிக்கு சொல்லிக் கொடுத்த மந்திரப்படி மற்ற இருவரும் பிறக்கிறார்கள்.
அர்ச்சுனன், இந்திரனின் அருள் பெற்று பிறந்தவன். பிறப்பிலேயே எல்லா திறமைகளும் இந்திரனின் அருளும் பெற்றவனாவான். இவனைப் பற்றி ஒரு சிறு கதையும் உண்டு. இவன் சிறுவயதில் இவனின் குருவான துரோணாச்சாரியாரிடம் வில்வித்தை கற்றுவருகிறான். வில்வித்தையில் வித்தகன். எனவே துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் இவனைக் கண்டு பொறாமை கொள்கிறான். அர்ச்சுனன் இரவு சாப்பிடும்போது விளக்கு வெளிச்சம் வைத்து சாப்பாடு போடும்படியும், அதை எல்லா இரவுகளிலும் தடையில்லாமல் செய்து வரும்படியும் தன் வேலையாட்களுக்கு அஸ்வத்தாமன் கட்டளையிடுகிறான். வெளிச்சத்திலேயே சாப்பிட்டு பழக்கப்பட்டவன் இந்த அர்ச்சுனன். திடீரென்று ஒருநாள் இரவு, விளக்கு வைக்கவில்லை. அர்ச்சுனன் எந்த தடையும் இல்லாமல் சாப்பிடுகிறான். வெளிச்சம் இல்லை என்ற குறையே இல்லையாம் அர்ச்சுனனுக்கு. எப்படி இது சாத்தியம் என அர்ச்சுனன் யோசிக்கிறான். இருட்டில் நாம் எப்படி சாப்பிடுகிறோம். கை எடுக்கிறது, அந்த கைக்கு வாய் இருக்கும் இடம் தெரியும். எனவே உணவை கையானது வாயக்கு கொண்டு சென்று சரியான இடத்தில் வைத்து விடுகிறது. எல்லாமே உணர்வுகளின் அடிப்படையில் நடக்கிறது. இங்கு வெளிச்சத்துக்கு என்ன வேலை என்று அர்ச்சுனன் யோசிக்கிறானாம்.
அப்படியென்றால், பகலில் ஒரு மனிதன் செய்யும் வேலைகளை இரவிலும் அப்படியே செய்யலாமே என்று நினைக்கிறான். அப்படியென்றால், பகலில் நாம் பயிலும் வில்வித்தையை இரவில் பழகலாமே என்று கருதி இரவில் இருட்டில் வில் வித்தை செய்கிறான். இவனைத்தவிர வேறு யாருக்கும் இருட்டில் வில் போர் செய்யத் தெரியாதாம். தான் கற்ற கலைதான் இவனுக்கு கதாநாயக பட்டத்தை கொடுக்கிறது. இவனின் வில்தான் மீன் இயந்திரத்தை அதன் கண்ணில் சுட்டு வீழ்த்தி, திரௌபதை என்னும் பேரழகியை மனைவியாக்கினான்.
இவன் கதாநாயகன் என்பதால், சிவனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டிருக்கிறான். எப்படி? அர்ச்சுனன் தவம் இருக்கிறான். பாசுபத அம்பு வேண்டும் என்று தவம். அது இருந்தால்தான் முதல்நிலை வில்வீரன் ஆவான். தவம் இருக்கும் இடத்தில் ஒரு வேடனாக சிவன் வந்து அங்கிருந்த பன்றி ஒன்றை வில்லால் அடிக்கிறார் சிவன். அந்த பன்றி அர்ச்சனை தாக்க நினைத்தது. அப்போது சிவன் ஒரு அம்பு விட்டு அர்ச்சுனனை காப்பாற்றுகிறார். (கடவுள் எப்போதும் கதாநாயகர்களை காப்பாற்றிவிடுவார்போலும்!). அதே நேரத்திலேயே அர்ச்சுனனும் அந்த பன்றிமீது ஒரு அம்பை விட அது இறக்கிறது. இப்போது சிவனுக்கும் அர்ச்சுனனுக்கும் வாக்குவாதம். என் அம்புதான் பன்றியை கொன்றது என்று இருவருமே பெருமை பேசிக் கொள்கிறார்கள். சண்டையே வந்துவிடுகிறது. சண்டையின் உச்சக்கட்டத்தில், சிவன் அவரின் உண்மை உருவத்தை அர்ச்சுனனுக்கு காண்பிக்கிறார். அர்ச்சுனன் அவரை வணங்குகிறான். சிவன் தன் கையால் பாசுபதம் என்ற வில்லைக் கொடுக்கிறார். அர்ச்சுனன் பெற்றுக் கொள்கிறான்.
அர்ச்சுனன் சிவனிடமும் நட்புடன் இருந்திருக்கிறான். விஷ்ணுவிடமும் (கிருஷ்ணனிடமும்) நட்புடன் இருந்திருக்கிறான். அர்ச்சுனன் கதாநாயகன் ஆக வேண்டும் என்பதற்காக சிவனும் வழிய வந்து உதவி இருக்கிறார். கிருஷ்ணனும் வழிய வந்து உதவி இருக்கிறார். கடவுள்கள் உதவுவது அதிர்ஷ்டம்தான். ஆனால், இந்த கடவுள்கள் இவனைக் கொண்டு தங்கள் காரியங்களை இந்த பூமியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
கதாநாயகன் என்றால் கதாநாயகிகள் இல்லாமல் இருக்குமா! இவனின் மனைவிகள்: திரௌபதி, உலூபி, சித்திராங்கதை, சுபத்திரை. (இந்த சித்திராங்கதை பாண்டிய நாட்டு மன்னனின் மகளாம்; இந்த சுபத்திரை கிருஷ்ணனின் தங்கையாம்.) அதனால்தான், பெண் கொடுத்த பாண்டிய மன்னர், மகாபாரதப்போரில் அர்ச்சுன்ன் வழியில் சண்டையிடுபவர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து போட்டாராம்; கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு தேரை ஓட்டிடும் சாரதியாக இருந்திருக்கிறான்.) பெண்களைமணப்பதில் உள்ள சௌகரியம் இதுதான்போலும்!
இவன் (அர்ச்சுனன்) இவ்வளவு சிறப்பானவனாக இருந்ததற்கு என்ன காரணம். அர்ச்சுனன் மனிதப் பிறவி இல்லையாம். தேவரிஷிகளில் ஒருவரான "நரன்" என்னும் தேவரிஷியாம். அவர்தான் இந்த மண்ணுலகில் அர்ச்சுனனாக பிறந்திருக்கிறார். அதனால்தானோ என்னவோ, சிவனும், கிருஷ்ணனும் அவனுக்கு சேவை செய்திருக்கிறார்கள். மனிதனாக இருந்திருந்தால், இந்த கடவுள்கள் நிச்சயம் ஒரு காலக் கட்டத்தில் அர்ச்சுனனை கைவிட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு.
No comments:
Post a Comment