Saturday, July 25, 2015

மிருதசஞ்சீவி

சுக்கிரனுக்கு ஒரே மகள். தேவயானை. எனவே அவள் மேல் சுக்கிரனுக்கு ஆசை அதிகம். கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பார். இந்த சுக்கிரன் அசுரர்களுக்கு ஆசிரியராம். (இவருக்கு நேர் எதிராக, தேவர்களுக்கு வாத்தியார் குரு ஆவார்). 

சுக்கிரனிடம் ஒரு மருந்து இருக்கிறது. அது இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பிவிடும். அந்த மருந்துக்குப் பெயர் "மிருதசஞ்சீவி." இது மருந்து இல்லைபோல, ஏதோ மந்திரமாம். இந்த மந்திரம், சுக்கிரனிடம் இருப்பதால்தான், அசுரர்கள் சாவதில்லை. ஆனால் தேவர்களுக்கு இது பெரிய தொந்தரவாக இருந்தது. எப்படியும் இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். 

தேவர்களில் பிருகஸ்பதி என்பவரின் மகன் கசன் என்பவன் சுக்கிரனிடம் சிஷ்யனாக வந்து சேருகிறான். இவன் தேவர் கூட்டத்தை சேர்ந்தவன் என்று தெரிந்தும் சேர்த்துக் கொள்கிறார். சிஷ்யனாக சேர்ந்தவன் சுக்கிரனின் மகளை காதலிக்கிறான். மற்ற மாணவர்களுக்கு பொறாமை. அவன் மாடு மேய்க்க செல்லும்போது அவனை கொன்று சாம்பலாக்கி விட்டார்கள். அவன் வீடுதிரும்பாததை கண்டு சுக்கிரனின் மகள் கவலை கொண்டு, தந்தையிடம் சொல்கிறாள். அவரும் தன் ஞானதிருஷ்டியில் பார்த்து, அந்த மந்திரத்தை சொல்லி உயிருடன் வர வைக்கிறார். 

பார்க்கிறார்கள் மற்ற மாணவர்கள். வேறு முறையை தேர்வு செய்கிறார்கள். அவனை கொன்று அவனின் சாம்பலை மதுவில் கலந்து சுக்கிரனுக்கே கொடுத்து விடுகிறார்கள். அவரும் குடித்து விட்டார். மகள் தவிக்கிறாள். கேட்கிறாள். இவர் ஞான திருஷ்டி சொல்கிறது அவன் இவரின் வயிற்றுக்குள் சாம்பலாக இருக்கிறான் என்று. (ஏன் முதலிலேயே இந்த ஞானதிருஷ்டி வேலை செய்யவில்லையோ). 

மந்திரத்தை சொன்னால் இவர் இறந்துவிடுவார். மந்திரம் யாருக்கும் தெரியாமல் போய்விடும். இவரும் உயிர் பிழைக்க வேண்டுமென்றால், இவர் வயிற்றில் உள்ள அவனுக்கே அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு, அவனை உயிருடன் எழுப்பி, இவர் இறந்து, பின்னர் அவன் இந்த மந்திரத்தை சொல்லி, சுக்கிரனை உயிர் பெற வைப்பதாக ஏற்பாடு. அப்படியே முடிந்தது. 

எப்படியோ அவன் இந்த ரகசிய மந்திரத்தை தெரிந்து கொண்டான். அதுதானே அவனுக்கு வேண்டும்.  கிடைத்துவிட்டது மந்திரம். கிளம்ப வேண்டியதுதானே. காதலியிடம் சொல்லிவிட்டு செல்வதற்காக போகிறான். என்னை திருமணம் செய்து உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்கிறாள். நான் உனக்கு இப்போது சகோதரன் முறை ஆகி விட்டேன். எப்படி என்றால், உன் தகப்பனார் வயிற்றில் உயிர் பெற்ற பிறந்து விட்டதால் நான் சகோதரன். இதைக் கேட்ட அவளுக்கு கோபம் வந்துவிட்டது. இந்த மந்திரம் உனக்கு பலிக்காமல் போகக்கடவது என்று கோபமாக சாபம். அவனும் பதிலுக்கு உனக்கு பிராமணன் மணமகனாக வரவே மாட்டான் என்று சாபம் இடுகிறான். அவன் விட்ட சாபப்படியே யாயாதி என்ற யாதவரை திருமணம் செய்து கொள்கிறாள். இவனுக்கு அந்த மந்திரம் மறந்தே விட்டது.

எதையும் நேர்வழியில் பெறவில்லை என்றால் அது கடைசியில் கிடைக்காமல் போகும், அல்லது கிடைத்தும் பயன்படாமல் போகும் போல.

No comments:

Post a Comment