Tuesday, July 28, 2015

இந்திரஜித்து

 இந்திரஜித்து:
இராவணனின் மகனின் பெயர் இந்திரஜித்து. இவன்தான், இந்திரனை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தவன். இந்திரனை சிறை செய்ததால் "இந்திரஜித்து" என்று பெயர் வந்ததாம். அப்படியானால், இவனின் உண்மைப் பெயர் மேகநாதன். இந்த மேகநாதன் என்னும் இந்திரஜித்து மாயாஜாலம் செய்வதில் மன்னன். அதிமாயாவி என்று பேரெடுத்தவன். ஒரு இடத்தில் இருப்பவன் திடீரென்று மறைந்து வேறொரு இடத்தில் தோன்றுவானாம். இவன் எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்கமுடியாதாம். இன்னொரு சிறப்பும் இவனுக்குண்டு. அது, இவனை யாரும் கொன்றுவிட முடியாது. ஆனால், 14 வருடங்கள் தூக்கம் இல்லாமல் இருப்பவனால் மட்டுமே இவனை கொல்ல முடியுமாம். 

அப்படி இந்த உலகில் இருப்பவன் இராமனின் தம்பி இலட்சுமணன் மட்டுமே. இலட்சுமணனை பற்றிச் சொல்லும்போது அவனுக்கு இந்த சிறப்பையும் சொல்லுவர். இராமன் காட்டுக்கு சீதையுடன் வந்தபோது, இந்த இலட்சுமணனும் கூடவே வந்துவிட்டான். அவன் வந்த நாளிலிருந்து தூங்கவேயில்லை. அவன் மனைவி இவனுடன் காட்டுக்கு வரவேயில்லை. அவள் அரண்மனையிலேயே இருந்து விட்டாள். அங்கு இலட்சுமணன் காட்டுக்கு போன போது, தூங்கப் போனவள் இந்த 14 வருடங்களாக தூங்கிக் கொண்டே இருக்கிறாளாம். கணவன் வந்தபின்தான் முழிப்பு வருமாம். (இடையில் சாப்பாட்டுக்கு எழுந்திருப்பாளா மாட்டாளா தெரியவில்லை. பசியின்றி தூங்குகிறாளா தெரியவில்லை).

ஆக, மனைவி 14 வருடங்கள் தூக்கத்திலேயே இருக்கிறாள். அவள் கணவன் இலட்சுமணன் காட்டில் இந்த 14 வருடங்களும் தூங்காமலேயே இருக்கிறான். 
இப்படிப்பட்ட இந்த இலட்சுமணன், இலங்கையில் நடக்கும் போரில், இந்த மேகநாதன் என்கிற இந்திரனை வென்ற, சிறைபிடித்த, இந்திரஜித்துவை கொல்கிறான். வேறு யாரும் கொல்ல முடியாத இந்திரஜித்துவை 14 வருடம் தூங்காத இலட்சுமணன் கொல்கிறான் என்கிறது இதிகாசம். 


No comments:

Post a Comment