நாம் முன்னேறுவதற்கு தடையாக இருப்பவர் எவராக இருந்தாலும் (மகனே ஆனாலும், சகோதரனே ஆனாலும். நண்பனே ஆனாலும், குருவாகவே ஆனாலும்) அவர்களை கொன்றாவது அந்த லட்சியத்தை அடைவதில் தப்பில்லை என்று ஒரு மோசமான அறிவுறையை கூறியுள்ளனர். இது இப்போது கூறி அறிவுரை அல்ல. மகாபாரதத்தில் கூறியுள்ள அறிவுரை. திருதராஷ்டிர மன்னருக்கு அவரின் புத்திசாலி(!) மந்திரி கணிகன் என்பவன் அறிவுரை கூறினானாம். அதை கேட்ட பின்னர்தான், திருதராஷ்டிரன் தன் தம்பி மகன்களான பாண்டவர்மீது பகை கொண்டாராம்.
கதை இதோ:
ஒரு நரி, தனக்கு துணையாக ஒரு புலியையும், ஒரு எலியையும், ஒரு செந்நாயையும், ஒரு கீரியையும் நண்பர்களாக வைத்துக் கொண்டது. நரியின் குணம் தெரியாமல் அவர்களும் நண்பர்கள் ஆனார்களாம்.
காட்டில் இருந்த ஒரு கலைமானை அடித்து தின்றுவிட வெகுநாளாக இந்த நரிக்கு ஆசை. அதற்காக இவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறது. புலி விரட்டும் போது மான் ஓடிவிடுகிறது. எனவே எலியை கூப்பிட்டு, மான் தூங்கும் போது மானின் காலை கடிக்கச் சொல்கிறது. மான் நொண்டிக் கொண்டு திரியும்போது, புலி அடித்து கொன்றுவிடுகிறது. சாப்பிடும் நேரம் வருகிறது. நரியின் தந்திரம் ஆரம்பமாகிறது. நாம் எல்லோரும் நதியில் குளித்துவிட்டு வந்து இந்த மான் உணவை எல்லோரும் சாப்பிடலாம் என்று சொல்கிறது நரி. அதை நம்பி எல்லோரும் ஆற்றுக்கு குளிக்க போய்விட்டார்கள்.
முதலில், புலிவருகிறது. எலி சொன்னதனை புலியாகிய உனக்குச் சொன்னால் உன்னால் இந்த மானை சாப்பிடவே பிடிக்காது என்றது. எலி என்ன சொன்னது. நான் மானின் காலை கடிக்காவிட்டால் இந்த புலி இந்த மானில் ஒரு துண்டு கறியைக் கூட கடிக்க முடியாது என்று ஏளனமாக கூறியதாக நரி புலியிடம் கூறியது. முட்டாள் புலியும் அதை நம்பி கோபமாக சென்று விட்டது.
பின்னர் எலி வருகிறது. எலியிடம் கூறுகிறது. இந்த மானை புலி தன் பல்லால் கடித்து கொன்றது. அதன் விஷம் இன்னும் மானின் கறியில் உள்ளது. எனவே கீரி இந்த மான் உணவை உண்ணக் கூடாது என்று போய்விட்டது என்று பொய்யாகச் சொல்லியது. அதை நம்பிய எலி அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டது.
பின்னர், செந்நாய் வந்தது. அதனிடம், புலி இப்போதுதான் உன்மீது கோபமாக திட்டிவிட்டு சென்றுள்ளது. புலி தன் மனைவியை கூப்பிட்டுக் கொண்டு இங்கு வரும். அப்போது நீ இங்கு இருக்காதே. பின்னர் வரலாம் என்று நரி பொய்யாக கூறியதை கேட்டு செந்நாயும் ஓடிவிட்டது.
பின்னர், கீரி வந்தது. கீரியைப் பார்த்து, நான் மிக பலமானவன். எனக்குப் பயந்து புலி, எலி, செந்நாய், எல்லோருமே ஓடிவிட்டார்கள் பார். உனக்கு உண்மையில் வீரம் இருக்குமானால் என்னை வென்று இந்த உணவை எடுத்துக் கொள் என்ற கூறிய நரியின் பேச்சை நம்பி அதுவும் ஓடிவிட்டது.
பின்னர், நிதானமாக நரி அந்த இறந்த மானின் கறியை உண்டு மகிழ்ந்ததாம்.
No comments:
Post a Comment