இந்திரன்:
இந்த பூமியில் உள்ள மனிதர்களுக்கு அரசன் இருக்கிறான். அவன்தான் மக்களை ஆள்கிறான். இப்போது அத்தகைய முறைகள் மாறிவிட்டது. இருந்தாலும் அடிப்படை ஒன்றுதான்.
பூமியைப் போலவே, மேல் உலகத்தில் தேவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு அரசன் இருக்கிறான். அவன்தான் இந்திரன். இந்திரலோகத்துக்கு அரசன். தேவர்களுக்கு அரசனே, இந்த தேவேந்திரன். இந்த இந்திர பதவிக்குக் கடுமையான போட்டி இருக்கும் போல! (பூமியில் உள்ளதைப்போல ஒட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கு முடியாது). அசுவமேதயாகம் செய்ய வேண்டுமாம். பூமியில் எல்லா மன்னர்களுமே இந்த அசுவமேத யாகம் செய்வார்கள். அவ்வாறு ஓர் அசுவமேதயாகம் செய்வதே சிரமமாம். குதிரை யாகத்துக்குப் பெயர்தான் அசுவமேதயாகம் என்பது. பெரிய செலவு செய்து செய்யும் யாக வேலை இது. ஆனால் தேவ உலகத்தில், இந்த மாதிரி அசுவமேத யாகம் 100 யாகங்களை செய்தவர்தான் தலைவர் என்ற பதவியான இந்திர பதவியை அடைய முடியுமாம். இந்த பதவியில் இருப்பவருக்கு பெயர் "இந்திரன்" "தேவேந்திரன்".
அங்கும், பூமியில் நடப்பதுபோலவே அரசியல் நிகழ்வுகளும் உண்டாகும்போல! ஒருமுறை, இந்திரன் இரண்டு பேரை கொன்று விட்டான். யாரையாவது கொலை செய்ய நேர்ந்தால் அது பிரமகத்தி தோஷம் என்று சொல்லப்படுகிறது. அந்த தோஷம் இந்த இந்திரனை பற்றிக் கொள்கிறது. கொலை குற்றத்தில் இருப்பவன் (அதாவது பிரம்மஹத்தி தோஷத்தில் இருப்பவன்) பதவியில் இருக்க முடியாது. உடனே பதவி விலகிவிட வேண்டும் என்பது இந்திரலோக சட்டம். எனவே இந்திரன் பதவியை விட்டு விலகுகிறான். உடனே நகுஷன் என்பவன் அந்தப் பதவிக்கு வருகிறான். பதவி போன இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கி முடித்து மீண்டும் 100 அசுவமேத யாகம் செய்து மறு தேர்தலில் அந்தப் பதவிக்கு மீண்டும் வந்துவிடுகிறான்.
இந்திரன் என்பது அந்த இந்திரபதவியின் பெயராம். தனி மனிதனின் பெயர் இல்லை. எனவே இந்த பதவிக்கு பலர் வந்துள்ளனர். எல்லோரையும் அந்தப் பதவியின் பெயராலேயே இந்திரன் என்று அழைப்பார்களாம். இப்போது இந்திர பதவியில் இருப்பவன் பெயர் "புரந்தரன்" என்ற இந்திரனாம்.
ஒரு இந்திரன், கௌதமர் மனைவியை சீண்டி அசிங்கப்பட்டு சாபத்துக்கு உள்ளானவன். பதவியில் இருந்தால் இந்த ஆட்டமெல்லாம் போட சிலருக்கு ஆசை வந்துவிடும்போல!
ஆரம்பகால இந்திரன்கள், இறக்கைகள் கொண்டவர்களாம். இவர்கள் பறந்து பறந்து திரிவார்களாம்! இப்போது இருக்கும் இந்திரர்களுக்கு இறக்கைகள் இல்லை. எனவே தனி விமானம் வைத்துள்ளார்களாம். அப்படியொரு இந்திர விமானத்தை திருடித்தான் (அல்லது போரில் வென்று அல்லது வழிப்பறி செய்து) இராவணன் சீதையை கடத்திக் கொண்டு சென்றானாம்.
ஒருசிலர் சொல்கிறார்கள். இந்திரன் விமானம் எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. மேகங்களை விமானம் போல உபயோகித்தான் என்று சொல்கிறார்கள். இந்திரன் மழைக் கடவுள். இவன் இரக்கப்பட்டால்தான் பூமியில் மழை விழுமாம். அதனால்தான், பூமியில் உள்ளவர்கள் இந்திரனுக்கு இந்திரவிழா எடுக்கிறார்களாம். பொங்கலிடுகிறார்கள். புகழ்ந்தால் மழை தருவான்போல! இந்த விழாவைத்தான் "போகி" என்று அழைக்கிறார்களாம். இந்த பாராட்டை ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணன் தடுத்து, அவனே அந்தப் வழிபாட்டை ஏற்றுக் கொண்டானாம். அதனால்தான், இந்திரனுக்கு கோபம் வந்து மேகங்களை ஏவிவிட்டு மொத்த மழையையும் பொழிய வைத்தானாம்! அதை தாங்காது மக்கள் கலங்க, கிருஷ்ணன் அந்த மக்களைக் காக்க கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தானாம்.
ஒருமுறை இந்திர லோகத்திலுள்ள தேவர்களையெல்லாம் சூரபன்மன் என்ற இராட்சதன் சிறைசெய்து அவர்களை மீன்களைச் சுமக்க வைத்து கொடுமைப்படுத்தினானாம். அதற்கு பயந்து கொண்டு, இந்திரன் தப்பித்து ஓடி, பூமியிலுள்ள சீர்காழியில் பதுங்கி இருந்தானாம்.(பாதுகாப்பான இடம்போல!). குமரக் கடவுள் வந்து போரில் சூரபர்மனை கொன்றார் என்று தெரிந்த பின்னர்தான், இந்திரன் இந்திரலோகத்துக்கே மீண்டும் சென்றிருக்கிறான்.
இந்திரலோகத்தில் இவன் அரண்மனை இருக்கும் இடத்திற்கு பெயர் "அமாரவதி". இந்திரனின் மகள்தான் தெய்வயானை என்றும் சொல்கிறார்கள். இதனால்தான் இந்திரன் தன் மகளான தெய்வயானையை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தான்போலும்! தெரியவில்லை.
No comments:
Post a Comment