"பிராணநாதா! மேனாள் இந்திரப் பிரத்தத்தில் வெளியதுடீ (வெள்ளை உடையணிந்து) இக் கலவைச் சாந்தணிந்து உல்லாசமாயிருந்த மறலியன்ன மாற்றரு மொய்ம்பனாம் இவ் வீமன், இஞ்ஞான்று கால்நொந்து, குருதி பெருக்க் கல்லிலும் முள்ளிலும் நடந்து, உடல் முழுதும் தூசு படிந்து, மாசடைந்த மேனியனாய் இருத்தலைக் கண்டும் நுமக்கு மானம் பிறக்கவில்லையோ?
ஆருயிர்த் தலைவ! நீவிர் இராசசூயம் (யாகம்) வேட்ட அன்று மாதிரம் அனைத்தும் சென்று குடைந்து பொன், வெள்ளி முதலாம் திரவியங்களைக் குவியல் குவியலாகக் கொணர்ந்து குவித்த இவ் விசயன் (அர்ச்சுனன்), இதுகாலை, உடுக்க உடையின்றி மரவுரி உடுத்து மண்ணிற் கிடந்து உழலும் அலங்கோலத்தைக் கண்டேனும் நும்மைச் சினம் சுமாட்டாதோ?
இன்னுயிர்த் துணைவ! இடும்பையறியா இயல்பினரான நகுல சகாதேவர்கள், இப்போது கல்லும் முள்ளும் செறிந்த கரடுமுரடான நிலங்களிற் துயின்று துன்பமுறுவதைக் கண்டும் நும் நெஞ்சம் இளகாதோ?
இவர்களின் இத் துயர்நிலை கண்டு என் நெஞ்சம் தீமுகத்திட்ட மெழுகென உருகுகின்றதே காற்றத்திடைப்பட்ட கலவர் (மாலுமிகள்) மனம்போலக் கலங்குகிறதே? நுமதி நெஞ்சம் இவையிற்றை எல்லாம் பொறுத்திருப்பது யாது பற்றியோ? மக்களுடைய சித்த விருத்திகள் பலதிறப்பட்டனவேனும் நுமது உள்ளக்கிடக்கை உணர்தற்கு அரியதாகின்றது.
ஆருயிர்த துணைவ! மேனாள் அன்னத்தின் தூவி (இறகு) பரப்பிய மென்பூஞ் சேக்கையில் படுத்துக் கண்படைகொண்டு வைகளையில் வந்திமாகதர் வாழ்த்துப்பாடத் துயிலெழும் நீவிர், இன்று கூரிய தருப்பைப் புற்களிற் படுத்துத் துயில் கொண்டு நரிகளின் ஊளைச் சத்தம் கேட்ட பின்னரன்றோ கண்விழிக்கின்றீர். இதனை யான் எவ்வாறு சகிப்பேன்?
பண்டு எவ்வுயிரிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணர்க்கு முதல் அமுது படைத்துப் பின்னர் அவர் உண்டு ஒழிந்த மிச்சிலை மிசைவதே நுமது வழக்கமாயிருந்தது. அதனால் நும் யாக்கையும் (உடம்பும்) பொலிவுற்று விளங்கியது. புகழும் ஓங்கிப் பரவியது. இஞ்ஞான்று, கானகத்தில் காய் கனி கிழங்கு முதலியன உண்டு நும் திருமேனியும் மெலிவுற்றது. நல்லிசையும் நலிவுற்றது. இதனைக் காணுந்தோறும் என் மனம் படும் பாட்டைப் பகருவது எங்ஙனம்?
நீவிர் முன்பு அரியேறு சுமந்த மணியாதனத்துத் திருவோலக்கங் கொண்டிருக்கும் பொழுது நவமணி குயிற்றிய முடிகளால் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் நுஞ் சேவடிகள், இப்போது புல்வாய் முதலிய விலங்குகள் கடித்ததுபோக எஞ்சி நின்ற கூரிய தருப்பைப் தாள்களிலன்றோ நடந்து நடந்து வருத்தமுறுகின்றன. இதனையும் என் மனம் எவ்வாறு பொறுக்கும்? மன்பதை மாட்டு இன்ப துன்பங்கள் சகடக்கால் போல (வண்டிச் சக்கரம் போல) மாறி மாறி வருமெனினும், தெய்வீகமான இன்னல்களைப் பொறுப்பதன்றி மனிதரான் வரும் அவையிற்றைக் களைய முயலாது பொறுத்தல் சீரியதன்று.
இன்னுயிர் நாயக! இதுகாறும் நீவிர் பொறுமையை மேற்கொண்டது போதும் போதும். இனியேனும் பகை கடப்பதற்கான உபாயங்களை ஒல்லும் வகை முயன்று சிந்தித்தல் வேண்டும். பொறுமையால் வெல்லுபவர், உலகை முனிந்த முனிவரன்றி, உலகைப் புரக்கும் புரவலர் அல்ல. கூரிய பகழிகளை ஏவிப் பகைவரைக் கொன்று குவிக்கும், பேராண்மை மிகுந்த நும்போலியர் பொறுமையை மேற்கொண்டால் ஆண்மையென்பது யாரிடம் போய்ச் சரண் அடையும். பொறுமையாற்றான் இம் மண்ணுலகிங் மாந்தர் சுகம்பெறுவர் என்னும் குருட்டெண்ணத்தைக் கைக்கொண்டு காலத்தைக் கொன்னே கழிப்பீராயின்,
நுந்தோளிலிருக்கும் வில்லை முறித்தெறித்து சடைமுடிதரித்து அரசு வேண்டாமெனச் சூளுரைத்து அங்கி வளர்த்து, வேள்வி வேட்டு நுங் காலத்தைக் கழியாநிற்பீர். குறித்த அவதிக்கு இடையில் சினந்து போருக்கு எழுதல் நுமது பொய்யாத வாய்மைக்குப் பொருந்தாது என்று மனங்க கலங்க வேண்டாம். காட்டிடை வசதியும் எம்மாட்டு என்றும் தீங்கிழைக்கச் சமநம் பார்த்திருக்கும் கொடிய துரியோதனன்பால் அதனைக் காக்க ஏன் முயல வேண்டும்? பெரும! நீவிர் போர் தொடங்கிய அன்றே எமது தாழ்வும் ஒழியும்.
நல்வாழ்வும் பெருகும். மாலையில் மேலைப்புணரியில் ஆழ்ந்து தளர்ந்த ஞாயிறு மறுநாட் காலையிற் பன்னிறக் கதிர்கொண்டு பல்கிக் குணதிசையில் தோன்றி இவ்வுலகிற்குப் போதனை செய்யும் பாடம் என்னை? தாழ்ந்தவர் உயர்வர் என்பதன்றோ? மனம் ஒன்றே வேண்டற்பாலது. வெற்றி நுமக்கே. என் சிற்றுரையை இத்துடன் முடிக்கின்றேன். பிழை பொறுத்தருள வேண்டும் எனப் பணிந்து நின்றாள்.
(நன்றி; கிராதார்ச்சுனியத்தை தமிழில் எழுதிய பிரமஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்களுக்கு)
No comments:
Post a Comment