Friday, August 28, 2015

பாஞ்சாலியின் கோபம் (புருஷன் மீது) --1


தர்மனைப் பார்த்து பாஞ்சாலி பேசிய சிற்றுரை;

"என் உயிர்க் காதல! நீவிர் தருமநெறி பிழையா ஒழுக்கமுடையீர். யானோ சின்மதிப் பெண்மை தாங்கி நின்றவள். நும் முன்னர் அரசியல்பற்றி யாதும் பேசத் தகுதியற்றவள். எனினும், மாற்றான் வலியுற்றான் என்று நீவிர் கூறிய மாற்றமே என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசத் தூண்டிற்று.

உயிர்த்துணைவ! முன்னர் இந்திரனுக்கு இணையான இகல்வேந்தரால் நன்கு பரிபாலிக்கப் பெற்ற இக் குருநாட்டரசு, கடகளிற்றின் கையகத் தகப்பட்ட கமழ் பூமாலை என நும்மாற் கொன்னே சிதைக்கப்பட்டது. நீவிர் அரசை அன்று ஊழ்வலியால் இழந்தீரல்லீர். பகைவன் வாளி கூர்மை யுடைத்து என்று அறிந்தும், இருப்புச்சட்டை தரியாது பராமுகமாயிருந்து வருகிறீர், 'வருமுன் காப்பது நியாமல்லவோ'! வஞ்சகனிடத்தில் வஞ்சகமாக நடவாதவனுக்கு இவ்வுலகில் அவமானம் வந்து எய்துதல் திண்ணம் என்பதை அறியீரோ? இலக்குமி சபலை என்றாலும் (நிலையில்லாதவள்) குணமுள்ள கோமானை ஒருபோதும் விட்டகலுவதில்லையே. 

எழினலங்கொண்ட நும்முயிரன்ன மனையாளை மன்னவையில் மாற்றான் மானபங்கஞ் செய்யப் பார்த்திருந்தும் வாயடக்கி வாளாவிருந்தீரே? நாடோறும் விபத்துக்கள் எங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தும் நீவிர் பொறுதியை மேற்கொண்டது எவண்? நல்குடிப் பிறந்தார் தெய்வத்தால் தமக்கு, ஓர் இழிவு நேர்ந்துழியும் உயிர் வாழாரே. நீவிர் மனிதரால் வந்த இவ்விழிவுக்கு மருந்தாம் வெகுளியை இன்னும் மேற்கொள்ளாதது என்னை? ஒருகால் வெகுளி பொல்லாதது என்று அதனை விட்டொழித்தீரோ? சினம் செல்லுமிடத்து ஒருவன் அதனைச் செலுத்துவதற்குத் தடை என்ன? நீவிர் வெகுளின் உலகமே நடுங்கும். இம் மண்ணுலகத்துள்ள மன்னவர் எவருமே நுமக்கு வயப்படுவார்கள். சினமில்லான் பகையும், நட்பும் ஒரு தன்மைய. அவனை உலகம் சிறு துரும்பு எனவும் மதிப்பதில்லை. இனியேனும் நீவிர் சினங்கொண்டு பகைவர் வலியிழ்க்கத் துணியீரோ?
(நன்றி; கிராதார்ச்சுனியத்தை தமிழில் எழுதிய பிரமஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்களுக்கு)

No comments:

Post a Comment