Thursday, August 13, 2015

தேவரதா Devavrata

தேவரதா Devavrata
தேவதை கங்கா. இப்போது மனித உருவில் நிற்கிறாள். அவளுக்கு முன்னர் சந்தனு மன்னர் நிற்கிறார். தேவதை கங்கா இப்போது அழகிய மானிட உருவில் பெண்ணாக நிற்கிறாள். மன்னர் சந்தனு, அவள் அழகில் மயங்கி நிற்கிறார். விதி தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறதாம்.

கங்காதேவி: "மன்னரே! நான் உங்களின் மனைவியாகிறேன், ஆக முடியும், ஆனால் சில நிபந்தனைகள் உண்டே!"

மன்னர்: '???"

கங்காதேவி: "மன்னரே, நான் யாரென்று இப்போதும் கேட்கக்கூடாது, இனி எப்போதும் கேட்கக்கூடாது. எங்கிருந்து வருகிறேன் என்றும் கேட்கக்கூடாது. நான் என்ன செய்தாலும் ஏன் என்று கேட்கவோ தடுக்கவோ கூடாது. நான் நல்லது செய்தாலும், கெட்டதைச் செய்தாலும் ஏன் என்று கேட்கக்கூடாது. என்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. இதற்கு மாறாக நீங்கள் நடந்து கொண்டால், அப்போதே சொல்லாமல் உங்களிடமிருந்து நான் சென்று விடுவேன். இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? அவ்வாறு ஒப்புக் கொண்டால் நான் உங்களுக்கு மனைவியாக சம்மதிக்கிறேன்."

(இதைத்தானே இப்போதும் எல்லா மனைவிகளும் எதிர்பார்க்கின்றனர். செயல்படுத்தவும் செய்கின்றனர்.)

அழகின் போதையில் இருந்த மன்னர் சந்தனு இதற்கு ஒப்புக் கொண்டு சத்தியமே செய்து தருகிறார். இவளை மனைவியாக அடையவேண்டும், அடைவேன் என்று மனம் உறுதி செய்து கொண்டார். (மன்னராக இருந்தாலும், இந்த மாதிரி விவகாரங்களில் எல்லோருக்கும் மனம் என்பது ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.)

அரண்மனைக்கு அவளை கூப்பிட்டுக் கொண்டு வருகிறார். ஆசைப்பட்டது போலவே, அவளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். பிள்ளைகளும் பிறக்கிறது.
முதல் பிரசவம்...... குழந்தை பிறந்துவிட்டது. அந்த சிசுவை எடுத்துக் கொண்டு கங்கைக்கு செல்கிறாள். நதியில் இறங்கி, அந்த குழந்தையை தண்ணீரில் விடுகிறாள். குழந்தை மூழ்கி மறைகிறது. அரண்மனைக்கு திரும்புகிறாள். 

கொஞ்சநாள் கழித்து..... மறுபடியும் கர்ப்பம்.... மறுபடியும் பிரசவம்..... மறுபடியும் கங்கைக்கு போகிறாள்...... அந்தக் குழந்தையையும் கங்கையில் விடுகிறாள்.....அரண்மனை திரும்புகிறாள்.....

இப்படியாக ஏழு குழந்தைகளை கங்கையில் விட்டுவிட்டாள். இவள் என்ன பைத்தியமா? ஏன் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்? ஏன் அதை கங்கையில் மூழ்கடிக்க வேண்டும்? 

மன்னர் சந்தனுவுக்கு பயங்கர கோபம். இதுவரை பொறுமையாக இருந்தார். அமைதியாக இருந்தார். கொடுத்த வாக்குறுதி பொய்யாகக் கூடாதே என்று வாய்மூடி மௌனியாக இருந்தார்... இனிமேலும் பொறுத்திருக்க முடியாது. இவள் ஒரு பேயாகத்தான் இருக்க வேண்டும். பெற்ற குழந்தையை எவளேனும் தண்ணீரில் எறிவாளா? காரணமும் சொல்லமாட்டாளாம். கேட்கவும் கூடாதாம். அநியாயம். 

இதுவரை ஏழு குழந்தைகளை கங்கைநீரில் விட்டுவிட்டாள். எட்டாவது குழந்தை பிறக்கிறது. அதையும் அவ்வாறே கங்கைக்கு கொண்டு செல்கிறாள். மன்னர் சந்தனுவும் பின்தொடர்கிறார். கரையிலிருந்து குழந்தையுடன் கங்கைக்குள் இறங்கிவிட்டாள். அப்போது அங்கு வந்த மன்னர் சந்தனு, அவளைத் தடுத்து நிறுத்தி, ஏன் இப்படிச் செய்கிறாள். உனக்கு இரக்கம் இல்லையா? காரணத்தைச் சொல் என அதிகாரத்துடன் கேட்கிறார். 

அவளுக்கு கோபம். "நீர் என்னை எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையின்படிதான் நான் உங்களுக்கு மனைவி ஆனேன். அந்த உறுதிமொழியை நீங்கள் மீறிவிட்டார்கள். இனி நான் உங்கள் மனைவி இல்லை" என்று கூறிவிட்டு, நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்ற காரணத்தையும் கூறுகிறாள்.

"வசிஷ்டர் என்ற முனிவரின் சாபத்தால் இந்த குழந்தைகள் எல்லாம் எனக்குப் பிறந்தன. அவை பிறந்து சில மணி நேரங்களே இவ்வுலகில் வாழும். பின்னர் அவை இறக்க வேண்டும் என்பது சாபம். இந்த எட்டுப்பேரும் வசுக்கள் (தேவ உலகத்தினர்). நான் கங்கை என்னும் தேவதை. என்மூலம் இவர்கள் பிறக்க வேண்டும் என்பதும் விதி. ஏழு வசுக்களும் அவர்களின் ஆயுட்காலத்தை இந்த எட்டாவது வசுவான, நமது எட்டாவது குழந்தைக்கு கொடுத்துள்ளனர். எனவே இந்த எட்டாவது குழந்தையை நான் அவ்வாறு கொல்ல மாட்டேன். அவனை நானே எடுத்துச் சென்று வளர்த்து உரிய வயது வந்தவுடன் அவன் உங்களைத் தேடி வருவான்" என்று கூறுகிறாள்.  அந்த எட்டாவது குழந்தையுடன் கங்கை நீருக்குள் மூழ்கி மறைகிறாள்.

இந்த வசுக்கள் ஒருமுறை இந்த பூமிக்கு வருகின்றன. அங்கு ஒரு காட்டில், வசிஷ்டர் என்ற முனிவர் தவத்தில் இருக்கிறார். அவரின் பசுமாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. பசு என்று சொல்லக்கூடாது. அதன் பெயர்  நந்தினி. அதைப் பார்த்த தேவ உலக வசுக்கள் அந்த பசுவின் மீது ஆசைகொண்டு அதை திருடிச் செல்ல நினைக்கின்றன. அவ்வாறு திருடியும் சென்று விட்டன. முனிவருக்கு முதலில் இது தெரியாது. பசுவைத் தேடி அழைந்து, பின்னர் தன் தவ வலிமையால் அது வசுக்களால் திருடிச் செல்லப்பட்டது என்பதை உணர்கிறார். வசுக்களுக்கு சாபமிடுகிறார். எட்டு வசுக்களும் இந்த பூமியில் பிறந்து எல்லா துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று சாபமிடுகிறார். அதை தெரிந்து கொண்ட வசுக்கள், பூமிக்கு வந்து வசிஷ்டரை வணங்கி மன்னித்துக் கொள்ளும்படி கேட்கிறார்கள். ஒருமுறை சாபம் கொடுத்தால் அதைத் திரும்ப பெற முடியாது. ஆனால் அதன் வேகத்தை குறைக்கலாம் அல்லது அதில் சிறு மாற்றம் செய்யலாம். எனவே வசிஷ்டர் இந்த சாபத்தை மாற்றி அமைக்கிறார். வசுக்கள் எல்லோரும் கங்காதேவியை சந்தித்து அவர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து பிறப்பித்து இறப்பை கொடுக்கும்படி வேண்டுகிறார்கள். கங்காதேவியும் சம்மதிக்கிறாள்.

அதாவது, எட்டுப்பேரில் ஏழுபேர் பிறந்தவுடன் இறந்து விடுங்கள், எட்டாவதாக பிறப்பவர் அந்த ஏழுபேரின் ஆயுளையும் சேர்த்து இந்த பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். வசுக்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

கங்காதேவியிடம் பிறந்து, இறந்து, எட்டாவது பிறந்தவரை, தாய் கங்காதேவி வளர்ந்து வாலிபனாக மன்னர் சந்தனுவிடம் அனுப்பி வைக்கிறார். 

"மன்னரே, இதோ உங்களின் மகன் தேவதத்தா; உங்களின் எட்டாவது மகன் இவன்தான். இவன் வேதங்களை படித்து விட்டான். வசிஷ்டர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். எல்லா வில் வித்தைகளையும் கற்றுக் கொண்டுவிட்டான், அவைகளை சுக்கிராச்சாரியார் சொல்லிக் கொடுத்து விட்டார். எல்லா கலைகளையும் கற்றுவிட்ட இவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று கூறி தேவரதாவை மன்னர் சந்தனுவிடம் ஒப்படைத்து விட்டு மறைந்து விட்டாள் கங்காதேவி.

இவர்தான் பீஷ்மர். 
மகாபாரதத்தில், பீஷ்மர் வெகுகாலம் உயிருடன் இருக்கிறார். இவரை எந்த மனிதனும் கொல்ல முடியாது. ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ இவரைக் கொல்ல முடியாது.


No comments:

Post a Comment