Tuesday, August 4, 2015

ஆன்மா

ஆன்மா
ஆன்மா ஒரு பொருள் அல்ல. மற்ற பொருள்களைப்போல இதை கண்ணால் காண முடியாது. இது உடலில் இருக்கும்போது உடல் இயங்குகிறது. இது இல்லையென்றால் உடல் இயக்கம் நின்று பிரேதமாகிறது. இதை வைத்துப் பார்த்தால், இதுவரை உடலில் இயங்கிய சக்தி ஒன்று உடலை விட்டுப் பிரிந்து விட்டது என்பது மட்டும் புலனாகிறது. இதுதான் இதுவரை உடலை இயக்கி வந்தது. அதனால்தான் இந்த உடல் இயங்கி வந்தது. 

ஒரு இயந்திரம் இயங்குவதற்கு ஏதோ ஒரு சக்தி தேவைப்படுகிறது. அதுபோல இந்த உடல் இயங்க ஏதோவொரு சக்தி தேவைப்படுகிறது. அப்படியென்றால், இயந்திர சக்திக்கும் இந்த உடலை இயக்கும் சக்திக்கும் ஏதேனும் அடிப்படை வேறுபாடு உள்ளதா? இந்த உடல் தோன்றுவதற்குமுன், அது எங்கிருந்திருக்கும்? இந்த உடல் அழிந்தபின், அது எங்கு போயிருக்கும்? சாதாரணமான கேள்விகள்தான். பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சிலர் இதை ஆன்மா என்கிறார்கள். சிலர் அந்த பெயரில் அதை ஒப்புக் கொள்வதில்லை. ஆன்மாவை ஒப்புக் கொள்பவர்கள் சைவசித்தாந்திகள்.
இந்த ஆன்மா கொள்கைப்படி, "நான்" வேறு, என் உடல் வேறு என்ற கொள்கையை எடுத்துக் கொள்கின்றனர். இந்த உடலுக்குச் சொந்தக்காரன் எவனோ அவனே "நான்" அல்லது அந்த நானே ஆன்மா எனலாம்.

ஆன்மா என்று ஒன்று இருந்தால், அதை யார் படைத்தார்கள் என்ற கேள்வி வருகிறதாம். அதை படைத்தவன் இறைவன் என எடுத்துக் கொள்ளலாமா எனவும் கேட்கிறார்கள். படைக்கப்பட்டது எல்லாம் அழியக் கூடியது என்றால், இந்த ஆன்மாவும் படைக்கப்பட்டதாக இருக்க முடியாது.

அடுத்த கேள்வி சற்று வேடிக்கையானது. இந்த இறைவன் ஆசையில்லாதவன் என்றால், அவன் ஏன், எதற்கு இந்த ஆன்மாவைப் படைக்கிறான். எதற்கோ படைக்கிறான் என்றால், ஏன் அந்த ஆன்மாக்களை கூன், குருடு, நோய் என்ற உடல்களில் புகுத்துகிறான். அப்படியென்றால் இறைவன் இதை படைத்திருக்க முடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியென்றால், இந்த ஆன்மாக்களுக்கு கிடைக்கும் உடல்கள் வேறுபட்டவைகளாக இருக்கின்றனவே, அது எதனால்? இந்த ஆன்மா முற்பிறவிகளில் செய்த கர்மத்துக்கு ஏற்ப அதன் அடுத்த உடல்கள் கிடைக்கின்றன என்று கருதவேண்டி உள்ளது.

ஆன்மா என்பது எங்கும் பரவியுள்ள ஒரு பொருள் என்கின்றனர். எப்போதும் உள்ளது என்றும் சித்தாய் உள்ளது என்றும் அதாவது அறிவாய் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

ஆன்மாவுக்கு இரண்டு குணங்கள் உண்டு என்கின்றனர். ஒன்று, ஆன்மா ஒருபோதும் தனித்து இருப்பதில்லை. ஏதாவது ஒன்றை சார்ந்தே இருக்குமாம். உடலில் இருக்கும்போது அது கர்மத்தை சார்ந்து நிற்கும். அதை விட்டு முக்தி நிலை அடையும்போது இறைவனை சார்ந்து நிற்கும் என்கிறார்கள் சைவ சித்தாந்திகள். அப்படியென்றால், அறிவு குறையும்போது உடலிலும், அறிவு தெளியும் போது இறைவனிடமும் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம்.



No comments:

Post a Comment