Monday, February 29, 2016

கந்தரலங்காரம்-40

கந்தரலங்காரம்-40

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.

(சேல் என்னும் மீன்கள் துள்ளித் திரிந்ததால், செந்தூர் வயல் பொழில்கள் அழிந்தன; தேன் கடம்ப மரத்தின் மலர்கள் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனங்கள்; மா மயில் வாகனனின் வேலாயுதம் பட்டு அழிந்தது வேல் என்னும் கடலும் சூரனும் வெற்பு என்னும் மலையும்; அவனின் கால் என்னும் திருவடிகள் என் தலைமீது பட்டு அழிந்தது, அயன் என்னும் பிரம்மன் எனக்கு எழுதிய என் தலையெழுத்து;)

சேல்பட்டழிந்தது செந்தூர்வயப்பொழிறேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனமாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையுஞ்சூரனும் வெற்புமவன்
கால்பட்டழிந்த திங்கென்றலை மேலயன்கையெழுத்தே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 40)

கந்தரலங்காரம்-39

கந்தரலங்காரம்-39

உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து என்னை உன்னில் ஒன்றா
விதித்து ஆண்டருள் தரும் காலமுண்டோ வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கி நின்ற அம்பரம் பம்பரம் பட்டு உழல
மதித்தான் திருமருகா மயிலேறிய மாணிக்கமே.

(பிறந்து இந்த மண்ணில் உழல்வதையும், பின்னர் சாவதையும் நீங்கி, என்னை உன்னுடன் ஒன்றாக ஆக்கிக் கொண்டு, அருள் தரும் காலம் வருமா? வெற்பு மலையை கொண்டு, பாம்பை கயிறாகக் கொண்டு, அம்பரத்தையே பம்பரமாக சுழற்றிய திருமாலின் மருமகனே! மயில் வாகனத்தில் ஏறிய மாணிக்கமே! )

உதித்தாங் குழல்வதுஞ்சாவதுந்தீர்த் தெனையுன்னிலொன்றா
விதித்தாண் டருடருங்காலமுண்டோ வெற்புநட்டுரக
பதித்தாம்புவாங்கி நின்றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் றிருமருகா மயிலேறிய மாணிக்கமே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 39)


கந்தரலங்காரம்-38


கந்தரலங்காரம்-38

நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என்செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்துதோன்றிடினே.

(நாள் என்னை என்ன செய்து விடும்! வினை தான் என்னை என்ன செய்துவிடும்! என்னை சுற்றும் கோள்தான் என்ன செய்துவிடும்! கொடுமையான கூற்றவன் என்னை என்ன செய்ய முடியும்! குமரேசனின் இரு பாதங்களும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகம் என்னும் ஆறு முகங்களும், தோளும், கடம்பு மாலையும், எனக்கு முன்னே வந்து தோன்றிடும்போது!)

நாளென்செயும் வினைதானென்செயு மெனைநாடிவந்த
கோளென்செயுங் கொடுங்கூற்றென் செயுங் குமரேசரிரு
தாளுஞ்சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்புமெனக்கு முன்னே வந்துதோன்றிடினே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 38)


கந்தரலங்காரம்-37

கந்தரலங்காரம்-37

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன் முது கூளித்திரள்
டுண் டுண்டு டுடுடு டூடூடூ டுடுடு டுண் டுடு டுண்டு
டிண் டிண் எனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்ற ராவுத்தனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் 37)

(கண்டு என்னும் கற்கண்டை உண்டதைப் போன்ற சொல்லை உடையவர், மெல்லியர் என்னும் மென்மையானவர், காமம் என்னும் கலவிப் புணர்வான கள்ளை (மது) மொண்டு உண்டு அறிவு மயங்கி அயர்ந்தாலும் வேலாயுதத்தை மறவேன்; முதுகூளி திரள் என்னும் முதிய பெண்பேய்கள் "டுண் டுண் டுடு டூடூ" என்று கொட்டி ஆட, வெம்மையான சூரனைக் கொன்ற ராவுத்தனே!)

(கந்தரலங்காரம் பாடல் 37)
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டுண்டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண்டு டுடுடு டூடூடூ டுடுடு டுண்டுடுடுண்டு
டிண்டிண்டெனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்றராவுத்தனே. 


கந்தரலங்காரம்-36

கந்தரலங்காரம்-36

சுழித்து ஓடும் ஆற்றின் பெருக்கானது செல்வம் துன்பம் இன்பம்
கழித்தோடுகின்றது எக்காலம் நெஞ்சே கரிக்கோட்டு முத்தைக்
கொழித்து ஓடும் காவிரிச் செங்கோடன் என்கிலை குன்றம் எட்டுங்
கிழித்தோடு வேல் என்கிலை எங்ஙனே முத்தி கிட்டுவதே.

(சுழித்துக் கொண்டு ஓடும் ஆற்றின் பெருக்குப்போல, செல்வமானது, துன்பம், இன்பம், இல்லாமல் ஓடுவது எக்காலம் நெஞ்சே? கரிகோட்டு முத்தை கொழித்துக் கொண்டு ஓடும் காவிரியின் செங்கோடனை (திருச்செங்கோட்டில் இருப்பவனை) நினைக்கவில்லை; எட்டுக் குன்றமும் (மலைகளும்) கிழித்துக் கொண்டு செல்லும் வேலை (வேல் ஆயுதத்தை) நினைக்கவில்லை; அப்படி இருக்கும்போது, எப்படி முக்தி கிடைக்கும்?) அருணகிரிநாதர் அருளிய கந்தரங்காரப் பாடல் 36

சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந்துன்பமின்பங்
கழித்தோடுகின்ற தெக்கால நெஞ்சேகரிக்கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடனென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென்கிலையெங்ஙனே முத்தி கிட்டுவதே.
(கந்தரலங்காரம்-36)


கந்தரலங்காரம்-35

கந்தரலங்காரம்-35

பத்தித் துறை இழிந்து ஆனந்த வாரி படிவதினான்
புத்தித் தரங்கம் தெளிவது என்றோ பொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே.

(பக்தித் துறையில் மூழ்கி ஆனந்தவாரி படிவதினால், புத்தியின் தரம் தெளிவாவது எப்போது! பொங்கும் வெம்மையான குருதி (சூடான ரத்தம்) குதிகொள்ள, வெம்மையான சூரனை, நீ விட்ட வேலாயுத்தால் குத்தித் தரங்கொண்டு, அமராவதி என்னும் இந்திரனின் சொர்க்க நகரத்தை கொண்ட மன்னவனே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் 35.

பத்தித்துறையிழிந் தானந் தவாரிபடிவதினான்
புத்தித் தரங்கந் தெளிவதென்றோ பொங்கு வெங்குருதி
மெத்திக்குதிகொள்ள வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண் டமராவதி கொண்ட கொற்றவனே.
(கந்தரலங்காரம்-35)

**

கந்தரலங்காரம்-34

கந்தரலங்காரம்-34

பொட்டாக வெற்பைப் பொருத கந்தா தப்பிப் போனது ஒன்றற்
கெட்டாத ஞானகலை தருவாய் இருங் காம விடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்குங்
கட்டாரி வேல் விழியார் வலைக்கே மனங் கட்டுண்டதே.

(வெடித்துச் சிதறும்படி வெற்பு என்னும் மலையுடன் மோதிய கந்தா! ஒன்றிற்கும் எட்டாத ஞானக் கலையை தருவாய்! இருங் காமப் பசியில் பட்டோரின் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரி வேல் போல விழிகளை உடைய பெண்களின் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டு, மனம் கட்டுப்பட்டு விட்டதே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் 34.

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞானகலை தருவாயிருங் காமவிடாய்ப்
பட்டாருயிரைத் திருகிப் பருகிப்பசி தணிக்குங்
கட்டாரிவேல் விழியார் வலைக்கே மனங்கட்டுண்டதே.
(கந்தரலங்காரம்-34)
**

Sunday, February 28, 2016

கந்தரலங்காரம்-33

கந்தரலங்காரம்-33

முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதுங் கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார் வெற்றிவேற் பெருமா
னடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமான் திருநாமம் புகழ்பவரே.

(முடிவில்லாத பிறவிக் கடலில் மூழ்க மாட்டார்; முழுவதும் கெடுக்கும் வறுமைப் பிணியில் கவலைப் படார்; வெற்றிவேலை வைத்திருக்கிற பெருமானின் அடியவர்களுக்கு நல்ல பெருமாள்; அவுணர் என்னும் அசுரர் குலம் அடங்க அவர்களை பொடியாக்கிய பெருமானே! உன் திருநாமத்தை புகழ்பவரே (பிறவிக் கடலில் புக மாட்டார்); அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் 33.

முடியாப்பிறவிக் கடலிற்புகார் முழுதுங்கெடுக்கு
மிடியாற்படியில் விதனப்படார் வெற்றிவேற்பெருமா
னடியார்க்குநல்ல பெருமாளவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாடிருநாமம் புகழ்பவரே.
கந்தரலங்காரம்-33


கந்தரலங்காரம்-32

கந்தரலங்காரம்-32

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்
துளைத்துப் புறப்பட்ட வேற் கந்தனே துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து ரட்சிப்பையே.

(பல கிளைகளாக புறப்பட்டு வந்த சூரின் மார்பையும் (சூரபர்மனின் மார்பையும்), மலையையும் ஊடுருவித் துளைத்து புறப்பட்ட வேல் என்னும் வேலாயுத்தை வைத்திருக்கும் கந்தனே! துறந்தோர் என்னும் முனிவர்கள் உள்ளத்தை வளைத்துப் பிடித்து பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்களை உடைய பெண்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கின்ற என்னை, நீ, எந்த நாள் வந்து ரட்சிப்பாய்?) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் 32.

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரியூடுருவத்
துளைத்துப் புறப்பட்டவேற் கந்தனே துறந்தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப்பதைக்க வதைக்குங்கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்றவென்னை யெந்நாள் வந்திரட்சிப்பையே.
(கந்தரலங்காரம்-32)


கந்தரலங்காரம்-31

கந்தரலங்காரம்-31

பொக்கக் குடிலிற் புகுதா வகை புண்டரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல் வீடு தந்தருள் சிந்து வெந்து
கொக்குத் தறிபட்டு தெறிபட்டு உதிரம் குமுகுமு எனக்
கக்கக் கிரி உருவக் கதிர்வேல் ஒட்ட காவலனே.

(இந்தப் பொய்யான குடில் என்னும் உடம்பில் புகாத வகையில். புண்டரீகம் என்னும் தாமரை மலரினும் செக்கச் சிவந்த கழல் வீடான முக்தியை தந்து அருள்செய்வாய்; சிந்து வெந்து பொங்கவும், கொக்கு தறியில் பட்டு, எறிபட்டு, ரத்தம் குமு குமு என கக்கிக் கொட்டமலையை ஊடுருவிச் செல்லும் கதிர்வேல் தொட்ட (கையில் வைத்திருக்கும்) காவலனே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 31

பொக்கக்குடிலிற் புகுதாவகை புண்டரீகத்தினுஞ்
செக்கச்சிவந்தகழல்வீடு தந்தருள்சிந்துவெந்து
கொக்குத் தறிபட்டெறிபட்டுதிரங்கு முகுமெனக்
கக்கக்கிரியுருவக் கதிர்வேறொட்ட காவலனே.
(கந்தரலங்காரம்-31)


கந்தரலங்காரம்-30

கந்தரலங்காரம்-30

பால் என்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையர் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே யெங்ஙனே முத்தி காண்பதுவே.

(பால் போன்ற மொழி என்றும், பஞ்சு போன்ற பதம் (பாதம்) என்றும், பாவையர் கண்கள் சேல் என்னும் கெண்டைமீன்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிகிற நீ, செந்தில்வேலன் கையில் இருக்கிற வேலைச் சொல்ல மாட்டேன் என்கிறாய், வெற்றியுடைய மயூரம் என்னும் மயிலைச் சொல்ல மாட்டேன் என்கிறாய், வெட்சி தண்டை அணிந்த கால் என்று சொல்ல மாட்டேன் என்கிறாய்; இப்படி இருக்கும் மனமே, நீ எங்ஙனம் முக்தி அடைவாய்?) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 30.

பாலென்பதுமொழி பஞ்சென்பது பதம் பாவையர்கண்
சேலென்பதாகத்திரிகின்ற நீசெந்திலோன்றிருக்கை
வேலென்கிலை கொற்றமயூரமென்கிலை வெட்சித்தண்டைக்
காலென்கிலைமனமே யெங்ஙனேமுத்தி காண்பதுவே.
(கந்தரலங்காரம்-30)


கந்தரலங்காரம்-29

கந்தரலங்காரம்-29

கடத்திற் குறத்தி பிரான் அருளாற் கலங்காத சித்தத்
திடத்திற் புணையென யான் கடந்தேன் சித்ர மாதர் அல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்த செவ்வாயிற் பணையில் உந்தித்
தடத்திற் தனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.

(குறத்தியின் பிரானான முருகப்பெருமான் அருளால், கலங்காத சித்தத்தில் (உள்ளத்தில்) புணை என்னும் தெப்பமாக நான் கடந்தேன்; அழகிய மாதர் அல்குல், கழுத்து, பழுத்த செவ்வாய், பணை என்னும் தோள்கள், உந்தித் தடாகம், தனம் என்னும் கொங்கைகள், இவைகளில் இருக்கிற வெம்மை என்னும் காம சமுத்திரம் என்னும் கடலை கடந்தேன்;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 29

கடத்திற்குறத்தி பிரானருளாற் கலங்காதசித்தத்
திடத்திற்புணையென யான்கடந்தேன் சித்ரமாதரல்குற்
படத்திற்கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பணையிலுந்தித்
தடத்திற்றனத்திற் கிடக்கும் வெங்காமசமுத்திரமே.
கந்தரலங்காரம்-29