“இராமனின் சாபம்”
தேவர்களுக்கும்
அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கிறது; பிருகு என்று ஒரு முனிவர்
இருக்கிறார்; அவருக்கு ஒரு மனைவி இருக்கிறார்; இந்த தேவர்-அசுரர் போரில், தேவர்கள் பக்கமாக விஷ்ணு
போரிடுகிறார்; அப்போது, விஷ்ணு, தெரியாமல்,
பிருகு முனிவரின் பத்தினியைக் கொன்று விடுகிறார்; இதைப் பார்த்த பிருகு முனி, விஷ்ணு மீது, மிகுந்த ஆத்திரம் கொண்டு, "விஷ்ணுவே! எனக்கு
என் மனைவி இல்லாமல் பண்ணி விட்டாய்; அதுபோல, நீயும் உன் பத்தினியைப் பிரிந்து, வருந்த
வேண்டும்" என்று ஒரு பெரிய சாபத்தை கொடுக்கிறார்;
அந்த சாபத்தால், விஷ்ணு எடுத்த அவதாரமே இராம அவதாரம்; இராம அவதாரமானது விஷ்ணுவின் ஏழாவது அவதாரம்; இக்ஷவாகு
வம்சம் என்று ஒரு வம்சம் உள்ளது; அதில் அஜன் என்ற மாமன்னர்
இருக்கிறார்; அவரின் மகன்தான் தசரதன்; அந்த
தசரதனுக்கும் அவர் மனைவி கௌசலைக்கும் மூத்த மகனாகப் பிறக்கிறார் இராமன்; தசரதன் புத்திரன் என்பதால் இவருக்கு தசரதி என்றும் பெயராம்; காகுத்தன் வம்சாவழியைச் சேர்ந்தவன் என்பதால் "காகுத்தன்"
என்றும் பெயராம்; ரகு குலத்தில் பிறந்ததால்
"ராகவன்" என்றும் பெயராம்;
பிருகு முனிவர்
சாபத்தால், இராமன் நிம்மதியாக ஒருபோதும்
மனைவியுடன் வாழவில்லை; காட்டுக்குப் போய், மனைவியைத் தொலைத்துவிட்டு, தேடித் திரிந்து, கடைசியாக, ராவணன், கும்பகர்ணன்
இவர்களைக் கொன்று, சீதையை மீட்கும்போது, இராமனுக்கு வயது நாற்பதாம்; குடும்ப வாழ்வில் வாழ
வேண்டிய காலத்தில் இராமனால் வாழ முடியவில்லை;
இந்த இராமனின் கதையை
வடமொழியில் கூறியவர் வான்மீகி; இதுவே ஆதி காவியம் என்றும்
சொல்கிறார்கள்; இது மொத்தம் ஏழு காண்டங்களைக் கொண்டது;
1) பால காண்டம், 2) அயோத்தி காண்டம், 3) ஆரணிய காண்டம் 4) கிஷ்கிந்தா காண்டம், 5) லங்கா
காண்டம், 6) யுத்த காண்டம், 7) உத்தர
காண்டம் என மொத்தம் ஏழு; இது மொத்தம் 24,000 கிரந்தங்களை (செய்யுள்களைக்) கொண்டது; இதில்
இன்னொரு சிறப்பு உள்ளதாம்; ஒவ்வொரு ஆயிரம் பாடல்கள் முடிந்து
தொடங்கும் முதல் பாடலின் முதல் வார்த்தை "காயத்திரி மந்திரத்தின்"
ஒவ்வொரு எழுத்தில் ஆரம்பிக்குமாம்; எனவே இதை "காயத்திரி
ரூபம்" என்றும் சொல்வர்;
இந்த பாடல்களை
அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கம்ப ராமாயணம் என்று அழகு தமிழில் வழங்கியவர்
கம்பர் என்ற கவிச் சக்கரவர்த்தி. இவர் இராமர் கதையை அப்படியே வைத்துக் கொண்டு, வர்ணனை எல்லாம் தமிழில் சொந்தமாகச் செய்துள்ளார்
என்பதே கம்பராமாயணத்தின் தனிச் சிறப்பு; வான்மீகி,
"லங்கா காண்டம்" என்று சொல்லியதை, கம்பர்
"சுந்தர காண்டம்" என்று பெயர் மாற்றி உள்ளார்; கம்பராமாயணம்
மொத்தம் 10,000 பாடல்களைக் கொண்டதாம்; ஆனால்
இன்னும் 2,000 உள்ளதை ஒட்டக்கூத்தர் செய்து வைத்தார் என்றும்
கூறுவர்;
சூர்ப்பனகை, சீதையைப் பற்றி இராவணனுக்கு கூறி ஆசையை ஊட்டுகிறாள்,
இப்படி:-
"இந்திரன்
சசியைப் பெற்றான்
இருமூன்று
வதனத்தோன்தன்
தந்தையும் உமையைப்
பெற்றான்
தாமரைச் செங்கணானும்
செந்திருமகளைப்
பெற்றான்
சீதையைப் பெற்றாய்
நீயும்
அந்தரம் பார்க்கின்
நன்மை
அவர்க்கு இலை உனக்கே, ஐயா."
தேவேந்திரன், சசிதேவியை அவன் மனைவியாக அடைந்திருக்கிறான்;
இருமூன்று ஆக மொத்தம்
ஆறுமுகங்கள் கொண்ட முருகனின் தந்தையான சிவன், பார்வதியை மனைவியாக
அடைந்திருக்கிறான்;
தாமரையில் இருக்கும்
செங்கண்ணன் ஆன திருமால், செந் திருமகளான லட்சுமியை
மனைவியாகப் பெற்றிருக்கிறான்;
இராவணனே! நீ, சீதையை அடைந்தாயென்று வைத்துக் கொள்;
இவ்வளவு பேரிலும்
யார் உயர்ந்தவர் என்று பார்த்தால், சீதைப் பெற்ற நீதான்
உயர்ந்தவன் ஆவாய்; நன்மை உனக்குதான், அவர்களுக்கு
இல்லை."
இந்தப் பாட்டில், கவிச் சக்கரவர்த்தி வார்த்தையால் விளையாடி
இருப்பாராம்;
"நன்மை
அவர்கில்லை உனக்கே" என்றும் எடுத்துக் கொள்ளலாமாம்; அல்லது "நன்மை அவர்க்கு, இல்லை
உனக்கு" என்றும் எடுத்துக் கொள்ளலாமாம்; இது கம்பனால்
மட்டுமே முடியும் என்கின்றனர் கவிஞர்கள்;
**
No comments:
Post a Comment